சென்னையில் வீட்டு தனிமையில் 3.34 லட்சம் பேர் உள்ளனர் - மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னையில், வீட்டு தனிமையில் 3.34 லட்சம் பேர் உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-15 08:54 GMT
சென்னை, 

சென்னையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது.

அதில் கொரோனா தொற்று இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கொரோனா அறிகுறி இருந்தால், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். 

இந்தநிலையில் சென்னையில், 3.34 லட்சம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர் என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இதுவரை சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 பேரும், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் 5 லட்சத்து 82 ஆயிரத்து 750 பேரும், பரிசோதனை செய்தவர்கள் 4 லட்சத்து 55 ஆயிரத்து 976 பேரும், பயணம் செய்தவர்கள் 2 லட்சத்து 5 ஆயிரத்து 38 பேரும், காய்ச்சல் முகாமில் கலந்து கொண்டவர்கள் 97 ஆயிரத்து 334 பேர் என மொத்தம் 17 லட்சத்து 31 ஆயிரத்து 851 பேர் வீட்டு தனிமையை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களில் 13 லட்சத்து 63 ஆயிரத்து 146 வீட்டு தனிமையை முடித்துள்ளனர். 3 லட்சத்து 34 ஆயிரத்து 792 பேர் தற்போது தனிமையில் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்