உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு சிகிச்சை - மருத்துவ அறிக்கையில் தகவல்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றும், தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-08-17 23:15 GMT
சென்னை,

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியாகி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடையை பிரார்த்திப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்றும் அவருக்கு டாக்டர்களை அடையாளம் தெரிகிறது என்றும் அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார். முன்பை விட இப்போது கொஞ்சம் நன்றாகவே அப்பா மூச்சு விடுகிறார். முழுமையான மயக்க நிலையில் இல்லை என்றும் கூறினார்.

இந்தநிலையில் நேற்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவ நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.”

இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மகன் எஸ்.பி.பி சரண் இன்னொரு வீடியோ வெளியிட்டார். அதில், “எனது தந்தை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எந்த நிலையில் இருந்தாரோ அப்படியேதான் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராகவே உள்ளது. எந்த சிக்கலும் இல்லை. மீண்டும் உங்கள் எல்லோருடைய பிரார்த்தனைகள், வாழ்த்துகள், அன்பு, அக்கறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அப்பா நிச்சயம் மீண்டு வருவார்.” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்