சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் புதிய வசதி: நடைமேடை தடுப்பு கதவுகள் அமைப்பு
சென்னையில் பொதுமக்கள் போக்குவரத்தில் மெட்ரோ ரெயில் முக்கிய பங்கு வகிக்கிறது.;
சென்னையில் பொதுமக்கள் போக்குவரத்தில் மெட்ரோ ரெயில் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னையில் சென்டிரல் - பரங்கிமலை, விம்கோநகர் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர்.
இதனிடையே, 2-வது கட்டமாக பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் இடையே 26 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பூந்தமல்லி - போரூர் சந்திப்பு வரையிலான 10 கி.மீ. தூர பணிகள் முடிவடைந்துள்ளன. 3 முறை டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்களும் வெற்றிகரமாக இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் 10 ரெயில் நிலையங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் உயர்மட்ட பாலத்தில் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையங்களில் பயணிகளுக்காக புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் மெட்ரோ ரெயில் பாதையில் உயர்மட்ட ரெயில் நிலையங்களில், ரெயில் பாதைக்கும், பிளாட்பார்மிக்கும் இடையே தடுப்பு கதவுகள் எதுவும் கிடையாது. ஆனால், போரூர் - பூந்தமல்லலி இடையே உள்ள 10 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ரெயில் வந்து நின்றதும் இந்த கதவுகள் திறக்கும். இதன் மூலம் விபத்துகள் தவிர்க்கப்படும். ஏற்கனவே, சுரங்கப்பாதையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.