இந்தியில் மட்டுமே நடத்தப்பட்ட இணையவழி யோகா பயிற்சி: மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளருக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

இந்தியில் மட்டுமே இணையவழி யோகா பயிற்சியை நடத்திய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-08-23 01:47 GMT
சென்னை, 

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்காக நடைபெற்ற ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்ற 37 மருத்துவர்களிடம் “இந்தி தெரியவில்லை என்றால் ஆன்லைன் வகுப்பில் இருந்து வெளியேறுங்கள்” என்று மத்திய பா.ஜ.க. அரசின் ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கோட்சே என்பவர் ஆணவத்துடனும், இந்தி மொழி வெறியுடனும், மிரட்டல் விடுத்திருக்கும் அட்டூழியத்திற்கு, தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓர் அரசு அதிகாரி, அதுவும் மத்திய அரசின் செயலாளராக உள்ள ஓர் உயரதிகாரி, இப்படி அநாகரிகமாகவும், பண்பாடற்ற முறையிலும் மொழிவெறி தலைக்கேறி, பேயாட்டம் போட்டிருப்பது வெட்கக்கேடானது. இவருக்கு ஆயுஷ் துறை செயலாளராக 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு கொடுத்திருப்பது, ஆவேசத்துடன் இந்தி பிரசாரம் செய்வதற்கும், நம் அன்னைத் தமிழ்மொழியை அவமதிப்பதற்குமா என்ற கோபம் கலந்த கேள்வி தமிழக மக்கள் மனதில் இயல்பாகவே எழுந்துள்ளது.

ஓர் உயர் அதிகாரிக்கு இலக்கணமான கண்ணியத்திற்கும், நியாய உணர்வுக்கும், சமநிலை மனப்பான்மைக்கும், தனக்கும் தொடர்பே இல்லை என்றெண்ணி அவர் எல்லை மீறி நடந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட ஆயுஷ் துறை செயலாளர் ராஜேஷ் கோட்சே மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நேர்ந்து விடாமல் உறுதி செய்திட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்கிறேன்.

டெல்லியில் நடைபெறும் கூட்டங்கள், இதுபோன்ற ஆன்லைன் பயிற்சிகள் போன்றவற்றில் தமிழகத்தில் இருந்து பங்கேற்போரை அவமதிக்கும் இத்தகைய தரக்குறைவான போக்கு கைவிடப்பட வேண்டும் என்றும், அதுபோன்ற பயிற்சிகள், கூட்டங்கள் அனைத்தும் இந்தி பேசாத மாநில மக்களின் இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில்தான் நடைபெற வேண்டும் என்றும் பிரதமருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி புத்தாக்க பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது மட்டுமின்றி, அதைத் தட்டிக்கேட்ட தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் அவமதித்துள்ளார், மிரட்டியுள்ளார். அதிகார மமதையிலான இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளரின் நடவடிக்கைகள் அதிகார அத்துமீறலின் உச்சக்கட்டமாகும். மத்திய அரசில் பதவி வகிப்பவர்கள் அவர்களுக்கு தெரிந்த இந்தி மொழியில் மட்டும்தான் வகுப்புகளை நடத்துவார்கள், அந்த மொழி தெரியாதவர்கள் அதை எதிர்த்து கேள்விகூட கேட்கக்கூடாது என்பது ஆதிக்க மனநிலை ஆகும்.

இந்தி பேசுபவர்கள்தான் இந்தியாவின் எஜமானர்கள் போலவும், இந்தி தெரியாத தமிழ் உள்ளிட்ட தென்மாநில மொழிகளைப் பேசுபவர்கள் கொத்தடிமைகள் போலவும் மத்திய அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் நினைத்துக்கொள்வது ஆபத்தானது, ஜனநாயகப் பண்பற்றது.

இந்த நிலை மாற வேண்டுமானால், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும். ஆயுஷ் பயிற்சி முகாமில் இந்தியை திணித்து, தமிழக மருத்துவர்களை அவமானப்படுத்தி, மிரட்டிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளருக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட தமிழக யோகா மருத்துவர்களை “இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள். மேலும் கேள்வி கேட்டால் தலைமைச் செயலாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என திமிரோடும், மமதையோடும், ஆணவத்தோடும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் கோட்சே மிரட்டியுள்ளார்.

தனக்கு எதிராக பேசியவர்கள் பெயர் பட்டியலைத் தயார் செய்து, “மாநில தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பிவைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்” என்று மிரட்டியுள்ளார். இந்த அமைச்சகத்தின் பெயரையே ஆயுஷ் என்று வைத்திருக்கிறார்கள். அதற்கு பொருள் தரும் ஆங்கில வார்த்தை கிடையாது. மத்திய அரசால் இந்தி திணிப்பு உச்சகட்டத்தில் நடத்தப்படுகிறது என்பதற்கு நடந்த சம்பவம் சரியான சாட்சியமாகும்.

மத்திய அரசு இத்தகைய போக்கைக் கைவிட வேண்டும். கோட்சேயை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆயுஷ் அமைச்சகத்தின் இணைய வழி கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்து 38 அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் தங்களது கருத்துகளை ஆங்கிலத்தில் தெரிவிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், பங்கேற்றவர்கள் அனைவரும் ஆங்கில மொழி அறிந்திருந்தாலும் இந்தியில் மட்டும்தான் பேசுவோம் என்று பிடிவாதம் காட்டியது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

இதற்கு தீர்வு காணுகின்ற வகையில் இத்தகைய மத்திய அரசின் கூட்டங்களில் இந்தியும், ஆங்கிலமும் கட்டாயம் பயன்படுத்துகிற வகையில் உரிய ஆணையை பிறப்பிப்பதற்கு பிரதமர் மோடி உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்படி முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனில், இந்தி பேசாத மக்களுக்கு நேரு வழங்கிய உறுதிமொழியை பாதுகாக்கிற வகையில் தீவிரமான போராட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகின்றேன்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய ஆயுஷ் துறை செயலாளரின் தேச ஒற்றுமையை சீர்குலைக்கும், தமிழ் மொழியை அவமதிக்கும் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற மொழி வெறியர்களின் மீது மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை மத்திய அரசு நடத்தும் பயிற்சி வகுப்புகளிலும், மத்திய அரசு நடத்தும் கூட்டங்களிலும் தமிழக அதிகாரிகள் பங்கேற்கமாட்டார்கள் என தமிழக அரசு அறிவிக்கவேண்டும் என முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்துகொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல. இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம். வாழிய பாரத மணித் திருநாடு.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

பயிற்சிக்கூட்டத்தில் இந்தி தெரியாதவர்களிடம் மொழிப் பாகுபாடு காட்டிய ஆயுஷ் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ஆயுஷ் துறை மந்திரி (தனிப் பொறுப்பு) ஸ்ரீபாத் யசோ நாயக்கிற்கு, தி.மு.க. எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள இணையதள வழி பயிற்சி முகாமில் பேசிய ஆயுஷ் அமைச்சக செயலாளர், இந்தியில் பேசுவது புரியாதவர்கள் இந்த கூட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று இந்தி பேசாதவர்களிடம் கூறியுள்ளார். பின்னர் தொடர்ந்து இந்தியிலேயே அவர் பேசியிருக்கிறார்.

மத்திய அரசில் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டுமே அலுவலக மொழிகள்தான் என்பது உங்களுக்குத் தெரியும். நமது அரசியல் சாசனத்திலும் 22 மொழிகள் அலுவல் மொழிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.

கடந்த 1959-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசிய அப்போதய பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாத மாநிலங்களுக்கு இணை மொழியாக ஆங்கிலம் தேவைப்பட்டால் எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் அதை அவர்கள் தொடரட்டும் என்று குறிப்பிட்டதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

எனவே நான் குறிப்பிட்டுள்ள சம்பவத்தில் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு, மொழியின் அடிப்படையில் நமது குடிமக்களுக்கு இடையே பாகுபாடு காட்டிய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்