தளர்வு இல்லாத ஊரடங்குக்கு முந்தைய நாளில் தமிழகத்தில் ரூ.243 கோடிக்கு மது விற்பனை - சென்னை மண்டலம் முதல் இடம்

ஊரடங்குக்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் தமிழகத்தில் ரூ.243 கோடியே 12 லட்சத்துக்கு மது விற்பனை ஆகி இருக்கிறது. இதில் சென்னை மண்டலம் அதிகம் விற்பனை செய்து முதல் இடத்தை பெற்றுள்ளது.

Update: 2020-08-30 23:05 GMT
சென்னை,

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர, பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மட்டும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் இருந்து சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டன.

தமிழகத்தை பொறுத்தவரையில் வாரத்தில் மற்ற நாட்களில் தளர்வுகள் இருந்தாலும், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருக்கும் என்பதால், முன்கூட்டியே வாங்கி இருப்பு வைத்து குடிப்பதற்காக ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மதுப்பிரியர்கள், டாஸ்மாக் கடைகளை மொய்த்து வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் தளர்வு இல்லாத முழு ஊரடங்குக்கு முந்தையநாளான சனிக்கிழமைகளில் ரூ.180 கோடி முதல் ரூ.250 கோடி வரை விற்பனை ஆகி இருந்தது. இந்த நிலையில் ஊரடங்குக்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் ரூ.243 கோடியே 12 லட்சத்துக்கு விற்பனை ஆகி இருக்கிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய 5 மண்டலங்களில் நேற்று முன்தினம் விற்பனையான புள்ளி விவரங்கள் வெளியானது.

அதன்படி, சென்னையில் ரூ.52 கோடியே 50 லட்சத்துக்கும், திருச்சியில் ரூ.48 கோடியே 26 லட்சத்துக்கும், மதுரையில் ரூ.49 கோடியே 75 லட்சத்துக்கும், சேலத்தில் ரூ.47 கோடியே 38 லட்சத்துக்கும், கோவையில் ரூ.45 கோடியே 23 லட்சத்துக்கும் மது வகைகள் விற்பனை ஆகியுள்ளது. இதில் சென்னை மண்டலம் அதிக அளவில் விற்பனை செய்து முதல் இடத்தை பெற்று இருக்கிறது. கடந்த 2 வாரங்கள் நடைபெற்ற விற்பனையோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த மது விற்பனை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்