ஆரணியில் பரிதாபம்: காய்கறி வேன் மோதல்; பேரூராட்சி பெண் ஊழியர் பலி

ஆரணியில் சாலையில் நடந்து சென்ற பேரூராட்சி பெண் ஊழியர் மீது காய்கறி ஏற்றிச்சென்ற வேன்மோதி விபத்துக்குள்ளானதில், அவர் பரிதாபமாக பலியானார்.

Update: 2020-09-07 21:36 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி வள்ளுவர் மேடு பகுதியில் வசித்து வருபவர் கார்த்தி. கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளா (வயது 36). இவர் ஆரணி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணி ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பரிமளா தனது வீட்டில் இருந்து பேரூராட்சி அலுவலகத்துக்கு செல்வதற்காக நேற்று காலை வழக்கம் போல் புதுவாயல் பெரியபாளையம் நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.

அப்போது புதுவாயலில் இருந்து பெரியபாளையம் நோக்கி காய்கறி ஏற்றிச்சென்ற வேன் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பரிமளா மீது பலமாக மோதியது. இதையடுத்து நிலைத்தடுமாறிச்சென்ற அந்த வேன் அங்குள்ள சாலையோர பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்தது.

இதைத்தொடர்ந்து, விபத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பரிமளாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார்.

இதற்கிடையே விபத்து காரணமாக பெரியபாளையம்-புதுவாயல் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் பலியான பரிமளாவுக்கு கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் தேன்மொழி, பிளஸ்-2 படித்து வரும் திவ்யா என இரண்டு மகள்களும், 10-ம் வகுப்பு பயிலும் திருமலை என்ற மகனும் உள்ளனர். இந்த விபத்து குறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பி ஓடிய காய்கறி வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்