சிவகங்கை அருகே10-ம் வகுப்பு மாணவி தற்கொலை- ஆன்லைன் வகுப்பால் விபரீத முடிவை எடுத்ததாக பெற்றோர் குற்றச்சாட்டு

சிவகங்கை அருகே 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் வகுப்பால் மன உளைச்சலில் இந்த விபரீத முடிவை எடுத்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.

Update: 2020-09-15 23:15 GMT
மாணவி சுபிக்‌ஷா
சிவகங்கை, 

சிவகங்கை அருகே 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் வகுப்பால் மன உளைச்சலில் இந்த விபரீத முடிவை எடுத்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் துபாய் நாட்டில் வேலை பார்த்துவிட்டு, கடந்த மார்ச் மாதம் சொந்த கிராமத்துக்கு வந்து, தற்போது அந்த பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி தனம், மகள் சுபிக்‌ஷா, மகன் சிபிராஜ்.

சுபிக்‌ஷா மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதமாக வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவி வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறையில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதன் பின்னர் மாணவியின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர் குற்றச்சாட்டு

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறியதாவது:-

எங்களது மகள் நன்றாக படிக்கக்கூடியவள். சிறு வயதியில் இருந்தே பேச்சு போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளாள். கடந்த 2017-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர். குறித்த பேச்சுபோட்டியில் பேசி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிசு பெற்றாள். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வகுப்பு நடந்து வருகிறது.

படிப்பில் அதிக கவனம் செலுத்தியதால் தற்போது எங்களிடம் கூட அவளால் பேச நேரம் கிடைக்கவில்லை. எங்களுடைய மகள் ஆன்லைன் வகுப்பால் ஏற்பட்ட மன உளைச்சலில்தான் இந்த விபரீத முடிவை எடுத்தாள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்