உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சி பணிகளுக்குத் தேவையான நிதியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-10-06 10:32 GMT
சென்னை,

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்து விட்டன. இந்நிலையில் ஊரக உள்ளாட்சிகளின் வளர்ச்சிப் பணிகளையும், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றத் தேவையான நிதியை ஒதுக்குவதில் தமிழக அரசு தேவையற்ற தாமதம் காட்டி வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “'தமிழ்நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்கள், 3 ஆண்டுகள் தாமதமாக கடந்த ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் தான் நடத்தப்பட்டன. அதிலும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள், சென்னை தவிர்த்து 27 மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் மட்டும் தான் நடத்தப்பட்டன.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டாலும் கூட, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கவில்லை. இதன் காரணமாக உள்ளாட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன.

கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட சிறப்பு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அத்துடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதன் மூலம் கிராமங்களில் புதிய மறுமலர்ச்சியை அரசு ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்