தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகியிருப்பதை அரசு உறுதி செய்கிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகியிருப்பதை அரசு உறுதி செய்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2020-10-09 16:54 GMT
சென்னை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஜி.குரும்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். முடிதிருத்தும் தொழிலாளி. இவரது 12 வயது மகள் கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மயக்கமடைந்த நிலையில் மின்சார வயரை மூக்கிலும், வாயிலும் செலுத்திக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் குற்றவாளி என அறிந்து வடமதுரை போலீஸார் கைது செய்தனர். திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் கடந்த மாதம் 29-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதுகுறித்துத் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மருத்துவர் நலச் சங்கம், முடிதிருத்துவோர் தொழிலாளர் நலச் சங்கம் மற்றும் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று தேனி ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட வழக்கில், சாட்சியங்களை அரசு நிரூபிக்காததால் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை ஆகியிருக்கிறார். தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகியிருப்பதை அரசு உறுதி செய்கிறது! #JusticeForKalaivani-க்காக மேல்முறையீடு செய்க! என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்