மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு: ஆளுநரின் முடிவை பொறுத்தே மற்ற பணிகள் மேற்கொள்ளப்படும் - தமிழக அரசு விளக்கம்

ஆளுநரின் முடிவை பொறுத்தே மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

Update: 2020-10-16 08:41 GMT
மதுரை,

அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்புகளில் சேர இருக்கும் மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடாக 7.5 சதவீதம் வழங்க வேண்டும் என்ற சட்ட மசோதாவை இந்த வருடமே அமல்படுத்த வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தெரிவித்த தகவல்களைக் கேட்ட மதுரை நீதிமன்ற நிர்வாக நீதிபதி கிருபாகரன், “கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிட முடியாதது. அவர்கள் தாங்கள் மருத்துவராகி கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டும் என்ற கனவோடு படிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய இடஒதுக்கீட்டை அரசு மறுக்கிறது என்பது மிகவும் வேதனைக்குரியது” என்று கண்கலங்கியபடி தனது கருத்தை தெரிவித்தார்.

இடஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதா தற்போது ஆளுநரின் பரிசிலனையில் உள்ளது என்பதால், இது குறித்து ஆளுநரிடம் கேட்டு பதில் தெரிவிக்குமாறு, ஆளுநரின் செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட இயலாது என்றும் காலக்கெடுவையும் விதிக்க இயலாது என்றும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது தான் நீதிபதி கண் கலங்கி இந்த கருத்தைத் தெரிவித்தார். 

இதனையடுத்து நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு எப்போது மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடக்கும்? மருத்துவக் கல்லூரி இடங்கள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு எப்போது வெளியிடும்? என்பது குறித்து அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை இன்று மதியம் 1 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதில் மனுவில் ஆளுநரின் முடிவை பொறுத்தே மற்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்கள் சேர்க்கையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இவ்வாறு தெரிவித்திருப்பதால் மேலும் காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் செய்திகள்