சேலம், தர்மபுரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

சேலம், தர்மபுரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2020-10-20 21:30 GMT
சென்னை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகி இருக்கிறது. 

இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் நேற்று மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று (புதன்கிழமை) சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, ஈரோடு, கோவை மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. 

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், ‘சேலம் 9 செ.மீ., திரிபுவனம் 7 செ.மீ., ராஜபாளையம் 6 செ.மீ., மானாமதுரை, ஆத்தூர், ஹரூர் தலா 5 செ.மீ., கோவிலங்குளம், வீரகனூர், காட்பாடி, புள்ளம்பாடி, ஸ்ரீவில்லிபுத்தூர் தலா 4 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

மேலும் செய்திகள்