“இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் காலதாமதம் அர்த்தமற்றது” - இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்

7.5 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் காலதாமதப்படுத்தியது அர்த்தமற்ற செயல் என்று இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

Update: 2020-10-30 09:35 GMT
சென்னை,

அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் நிரைவேற்றப்பட்டு ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

இந்நிலையில் இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மீது ஆளுநர் உடனடியாக முடிவு எடுக்காமல் தாமதப்படுத்துவதால் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தச் சமூகத்திலும் அவசியமற்ற பதற்றம் உருவாக்கியுள்ளது.

அரசியலமைப்பு அதிகாரத்தின்படி செயல்படும் ஆளுநர், மாநில அமைச்சரவையின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்பட வேண்டியவர். மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சிமுறையில் மாநில அமைச்சரவையும், சட்டப்பேரவையும் கூடுதல் அதிகாரம் உள்ளது என்பதை ஏற்கத் தவறிய ஆளுநர் 7.5% இட ஒதுக்கீட்டுச் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதப்படுத்தியது அர்த்தமற்ற செயலாகும்.

இந்தக் காலதாமதத்தை நியாயப்படுத்த 'சட்ட ஆலோசனை' என்ற நடைமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை மக்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள். இதில் கிடைக்கும் படிப்பினையை ஆளுநர் உணர்ந்துகொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது” என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்