மு.க. ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகள் ரத்து: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

மு.க. ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2020-12-10 10:33 GMT
சென்னை,

சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடுகள் குறித்தும், மத்திய அரசின் தரவரிசை பட்டியலின்படி மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாகவும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து பேசினார் என கூறப்பட்டது.  இது தொடர்பான செய்தி 'முரசொலி' நாளிதழில் செப்டம்பர் 4ந்தேதி, டிசம்பர் 28ந்தேதி மற்றும் டிசம்பர் 30ந்தேதி ஆகிய நாட்களில் வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.  இதேபோன்று, மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் பற்றியும் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுக்களில், தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாக பேசிய ஸ்டாலினை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளையும் ரத்து செயய கோரி சென்னை ஐகோர்ட்டில் மு.க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், ஊழல் நடந்திருப்பது குறித்து மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அறிக்கை வெளியிடப்பட்டது என தெரிவித்து உள்ளார்.  இதேபோன்று தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேட்டு வழக்கை திசை திருப்பும் நோக்கிலேயே தன் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

இந்த 4 வழக்குகளின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.  இதில், இந்த 4 வழக்குகளையும் ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதன்பின்னர், பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்கக்கூடிய சகிப்புத்தன்மை வேண்டும் என கூறிய நீதிபதி, கட்சி தலைவர்கள் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்