டெலிவிஷன் நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி:முதல்வர் பழனிசாமி – கமல்ஹாசன் மோதல்; ரஜினிகாந்த் வருகைக்கு முன்பே சூடேறும் தேர்தல் களம்

டெலிவிஷன் நிகழ்ச்சியை பார்க்கும் குடும்பம் கூட நன்றாக இருக்காது-முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ; முதல்வரும் அந்த டெலிவிஷன் நிகழ்ச்சியை பார்க்கிறார் என்பது மகிழ்ச்சி-கமல்ஹாசன்

Update: 2020-12-18 02:04 GMT

சென்னை

எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன்; எம்ஜிஆரின் நல்லாட்சியை தருவேன் என தென் தமிழக பிரசாரத்தில் கமல்ஹாசன் தொடர்ந்து பேசிவந்தார். இதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு குறைவு

தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள், மருத்துவ வல்லுனர் குழுவினர் கொடுத்த அறிவுரைகளை அப்படியே நடைமுறைப்படுத்தியது போன்ற காரணங்களால் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு எடுத்த முயற்சிகள் நல்ல பலனை தந்திருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் தமிழக அரசு ஒன்றும் செய்யவில்லை என்று கூறிவருகிறார். என்ன நடக்கவில்லை என்று எங்களுக்கு தெரியவில்லை. எல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

முன்மாதிரி மாநிலம்

இந்தியா முழுவதும் இருக்கிற முதல்-அமைச்சர்கள் பங்கேற்ற பிரதமர் நடத்திய மாநாடு காணொலி மூலம் சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய பிரதமர் தமிழ்நாடு அரசு சரியான முறையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுத்த முயற்சிகளின் காரணமாகவே அங்கு வெற்றி பெற்று இருக்கிறது. ஆகவே அதனை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமல்ல சிறப்பான முயற்சிகள் எடுத்த தமிழ்நாடு அரசை பாராட்டுகிறேன் என்றும் குறிப்பிட்டார். ஆக கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் பாரதப்பிரதமரின் பாராட்டை பெற்றது நமது அரசுதான். மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதும் தமிழ்நாடு அரசுதான்.

இவ்வாறு கூறினார்.

உயர்கல்வி நிறுவனங்களில் தொற்று

இதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: சென்னை ஐ.ஐ.டி. அதனைத்தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் என உயர் கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளது. ஆகவே இதனை விரைவாக கட்டுப்படுத்த ஏதாவது சிறப்புத் திட்டம் செயல்படுத்துமா?

பதில்: அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் தான் அந்த நிறுவனங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. அதனை குறைப்பதற்கான நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு இருக்கிற மாணவர்கள் எல்லோருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

சினிமாவில் ஓய்வு பெற்றவர்

கேள்வி: அரசு அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைதுசெய்யப்பட்டு வருகிறார் கள். இதுகுறித்து கமல்ஹாசன் அரசு எவ்வழியோ அவ்வழியேதான் அதிகாரிகளும் செயல் படுவதையே இதுகாட்டுகிறது என்று கூறியுள்ளாரே?

பதில்: அரசாங்கம்தான் லஞ்சஒழிப்பு கைது நடவடிக்கையை நடத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகள் யார்மீது வருகிறது. அப்படியென்றால் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றுதானே அர்த்தம். எங்கேயும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறுகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அவர் (கமல்ஹாசன்) புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கிறார். அவருக்கு என்ன தெரியும். சினிமாவில் ஓய்வு பெற்றவர்.. அவருக்கு 70 வயதாகிறது. இந்த வயதில் டெலிவிஷன் நிகழ்ச்சி நடத்தி கொண்டிருக்கிறார்.

குடும்பத்தை கெடுப்பதே வேலை

டெலிவிஷன் நிகழ்ச்சி நடத்துபவர் அரசியல் செய்தால் என்னவாகும். அவர் நடத்தும் டெலிவிஷன் நிகழ்ச்சியை பார்க்கும் குடும்பம் கூட நன்றாக இருக்காது. அப்படிப்பட்ட ஒரு தலைவன் சொல்லக்கூடிய கருத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அவர் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. நன்றாக இருக்கக்கூடிய குடும்பத்தை கெடுப்பதுதான் அவரது வேலை. அதைப்பார்த்தால் நல்லா இருக்கும் குடும்பமும் கெட்டு போய்விடும்.

எம்.ஜி.ஆர். இருக்கும்போது பாடல்கள் மூலம் எவ்வளவோ நல்ல கருத்துகளை கூறினார். கமலஹாசன் ஒருபடத்திலாவது நாட்டு மக்களுக்கு நல்ல கருத்துகளை கூறியிருக்கிறாரா. நன்மை செய்யக்கூடிய பாடல்களை பாடியிருக்கிறாரா. எனவே அவர் சொல்லக்கூடிய கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வரின் பேட்டிக்கு பதிலளிக்கும் விதமாக, கமல் தனது டுவிட்டர், பேஸ்புக் பக்கங்களில்

முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது' என பதிவிட்டுள்ளார். மேலும், 'சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை.... அவர் எப்போதும் வால் பிடிப்பார். 'எதிர் காலம் வரும் என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என்ற எம்.ஜி.ஆர்., பாடல் வரிகளையும் பதிவிட்டு இருந்தார்.

கடலூர் திமுகவினரிடையே பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், போராடும் விவசாயிகளை தரகர்கள் என விமர்சித்த முதல்வர் எடப்பாடியாரை விமர்சித்தார். மேலும் சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்! ஒரு மானமில்லை. அதில் ஈனமில்லை! அவர் எப்போதும் வால் பிடிப்பார்!" - என்று ‘எங்கள் வீட்டுப் பிள்ளை' படத்தில் எம்.ஜி.ஆர். பாடியிருக்கிறார். இந்தப் பாட்டு இன்றைக்கு இருக்கும் எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்குப் பொருந்தும் எனவும் ஸ்டாலின் சாடியிருந்தார்.

கமல்ஹாசனின்  மக்கள் நீதி மய்யம் மூன்றாம் அணி அல்லது திமுகவுடன்  உடன் கூட்டணி அமைக்கும் என்ற ஊகங்கள் வரும் நேரத்தில்  கமல்ஹாசன் - முதல்-அமைச்சர் எடப்பாடி இடையே மோதல் வலுக்கிறது. தமிழக தேர்தல் களத்தை  ரஜினிகாந்த் வருகைக்கு முன்பே இது சூடேற்றி உள்ளது.

மேலும் செய்திகள்