வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டத்தை முடிக்க கோரி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் திட்டத்தை விரைவாக முடிக்க கோரி ஆதம்பாக்கத்தில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் டி.ஆர்.பாலு எம்.பி. கலந்து கொண்டார்.

Update: 2021-01-02 20:54 GMT
ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இருப்பதை கண்டித்தும், அந்த திட்டத்தை விரைவாக முடிக்க கோரியும் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆதம்பாக்கத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர்கள் என்.சந்திரன், பி.குணாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., செல்வம் எம்.பி., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருணாநிதி, ராஜா, வரலட்சுமி மதுசூதனன், இதயவர்மன், முன்னாள் எம்.எல்.ஏ. மீ.ஆ.வைதியலிங்கம், படப்பை மனோகரன், கோல்டு பிரகாஷ், ஜெகதீஸ்வரன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், நல சங்க நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையிலும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது டி.ஆர்.பாலு எம்.பி. பேசியதாவது:-

இந்த பறக்கும் ரெயில் பாதை திட்டம் தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. மதுரவாயல் பறக்கும் சாலை திட்டமும் கிடப்பில் போட்டு உள்ளனர். நீதிமன்றம் அனுமதி வழங்கியும் தி.மு.க. கொண்டு வந்ததால் 2 திட்டங்களையும் கிடப்பில் போட்டு உள்ளனர். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டங்கள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்