பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. இன்று மனு தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. இன்று (திங்கட்கிழமை) கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

Update: 2021-01-10 19:27 GMT
கோவை, 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து, அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதில், தொடர்புடைய சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இந்த பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் கைதான மற்றவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படை யில் சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் (தற்போது பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்), பைக் பாபு, ஹெரேன் பால் ஆகியோரை கடந்த 5-ந் தேதி போலீசார் கைதுசெய்தனர். கைதான 3 பேரையும் சி.பி.ஐ. போலீசார் கோவை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 20-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 3 பேரும் ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஏற்கனவே நடந்த பாலியல் சம்பவம் குறித்து வெளியான வீடியோவில் சம்பந்தப்பட்ட 2 பெண்களிடம் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தற்போது மேற்கண்ட 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதான அருளானந்தம் உள்பட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவ்வாறு 3 பேரையும் விசாரிக்க அனுமதி கிடைத்தால் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசார் திட்டமிட்டு உள்ளனர். 

மேலும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் போது இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதற்கு சி.பி.ஐ. போலீசார் திட்டமிட்டு உள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்