மலை ரெயில் இன்று முதல் மீண்டும் இயக்கம் - ரெயில்வே அதிகாரிகள் தகவல்

தண்டவளாத்தில் சரிந்த மண் அகற்றப்பட்டதால் ஊட்டி மலை ரெயில் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் இயக்கப்படுகிறது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-01-11 01:03 GMT
குன்னூர்,

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே தினமும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக மலை ரெயில் இயக்கம் நிறுத்தப்பட்டு இருந்தது. பின்னர் கடந்த 31-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டது. குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக ஹில்குரோவ் மற்றும் அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையே திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரெயில் நேற்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டது.

மேலும் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நேற்று ஏராளமான ரெயில்வே ஊழியர்கள் சரக்கு ரெயில் மூலம் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அங்கு விழுந்து கிடந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பொக்லைன் எந்திரமும் சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டு சீரமைப்பு பணி நடந்தது. தண்டவாளம் மீது மண் மற்றும் கற்கள் விழுந்ததால் அதில் உள்ள பல்சக்கரத்தில் பழுது ஏற்பட்டு இருந்தது. அதை அகற்றிவிட்டு புதிய பல் சக்கரங்கள் பொருத்தப்பட்டன.

பிறகு அங்கு சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது மண் சரிவு ஏற்பட்டு இருந்த இடத்தில் ரெயில் வெற்றிகரமாக சென்றது. இதனை தொடர்ந்து நேற்று குன்னூரில் இருந்து 4 காலி பெட்டிகளுடன் மலை ரெயில் மேட்டுப்பாளையம் புறப்பட்டு சென்றது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, தண்டவாளத்தில் சரிந்து கிடந்த மண் அகற்றப்பட்டு, சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. எனவே ஊட்டி மலை ரெயில் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் இயக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்