பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு

பொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசத்தை ஜனவரி 25ஆம் வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-01-11 13:44 GMT
சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 20-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

இதற்காக ரூ.5 ஆயிரத்து 604 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 235 ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும், இங்கே வசிக்கும் 18,923 இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், முழு கரும்பு (சுமார் 5 அடி நீளம்) மற்றும் துணிப்பை (ஜெயலலிதா- எடப்பாடி பழனிசாமி உருவம் பொறித்தது) வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 2,500 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் கடண்ட 4-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை மற்றும் மாலையில் தலா 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், அனைத்து மக்களுக்கும் விடுபாடின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பரிசு வழங்கும் தேதியை ஜனவரி 25 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பொங்கல் பரிசு பெற முடியாதவர்கள் ஜனவரி 18 முதல் ஜனவரி 25 வரை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர். சென்னை நீங்கலாக அனைத்து ஆட்சியர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் துறை சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்