கொரோனா பரவல் ஓயவில்லை: பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கொரோனா பரவல் ஓயவில்லை என்றும் பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-01-12 18:47 GMT
சென்னை,

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் கூட, நோய்த்தடுப்பு கோணத்தில் இம்முடிவு சரியானதல்ல. அவசர கோலத்தில் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

ஓர் வகுப்பில் ஒரு நேரத்தில் 25 மாணவர்கள் தான் இருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும்கூட, மாணவர்கள் தொடர்ந்து 3 மணி நேரம் வரை நெருக்கமாக அமர்ந்து இருக்கும்போது கொரோனா தொற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆபத்துகளையும், மாணவர்கள் நலனையும் கருத்தில் கொள்ளாமல் பள்ளிகளைத் திறக்கும் முடிவை தமிழக அரசு எடுத்திருக்கக்கூடாது.

பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டிருப்பதாலும், ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படுவதாலும் பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் காட்டத் தேவையில்லை. கல்வியைவிட குழந்தைகளின் உயிர் மிகவும் முக்கியமானதாகும்.

நிலைமை ஓரளவு சீரடைந்த பின்னர் பள்ளிகளைத் திறப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று ஒரு டாக்டராக நான் கருதுகிறேன். எனவே, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்