நெல்லை, தென்காசியில் கொட்டித்தீர்த்த கனமழை: தாமிரபரணியில் சீறிப்பாயும் வெள்ளம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் நேற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், படகு மூலம் மக்கள் மீட்கப்பட்டனர்.

Update: 2021-01-13 21:54 GMT
நெல்லை, 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநதி அணைகள் நிரம்பி இருந்ததால் வினாடிக்கு 52 ஆயிரம் கனஅடி வீதம் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதன் காரணமாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்றும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 25,820 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மணிமுத்தாறு அணையில் இருந்து 28,798 கனஅடி வீதமும், கடனாநதி அணையில் இருந்து 3,379 கனஅடி வீதமும் தண்ணீர் கூடுதலாக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதாவது, தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு சுமார் 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் ஆற்றில் பெருக்கெடுத்து சீறிப்பாய்ந்து செல்கிறது. ஆற்றில் உள்ள நெல்லை குறுக்குதுறை சுப்பிரமணிய சுவாமி கோவிலை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நெல்லை வண்ணார்பேட்டை சாலை தெரு, சந்திப்பு சிந்துபூந்துறை, அண்ணாநகர், மீனாட்சிபுரம், கைலாசபுரம், வேடுவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்களை தீயணைப்பு படை வீரர்களும், போலீசாரும் ரப்பர் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி தகவல் மைய வளாகத்துக்குள் வெள்ளம் புகுந்தது. சாலைக்கு வந்த வெள்ளநீரால், நெல்லை-திருச்செந்தூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கனமழை பெய்ததால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் கொட்டி வருகிறது. இதனால் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

மேலும் செய்திகள்