வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்பது ஏன்? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்பது ஏன்? என்பது குறித்து டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.

Update: 2021-01-14 02:24 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பெரும்பான்மையினருக்கு சரியான புரிதல் இல்லை. ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் எப்படி உள் ஒதுக்கீடு வழங்கமுடியும்? என்றெல்லாம் வினாக்கள் எழுப்பப்படுகின்றன.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எந்த ஒரு சாதிக்கும் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டம் நிர்ணயித்துள்ள முதன்மைக்கூறு, அந்த சாதி சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியிருக்கிறது என்பதை கணக்கிடக்கூடிய புள்ளிவிவரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்பதுதான். ஒரு தொகுப்பாகத்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தனித்தனி சாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில்கூட பட்டியலின மக்களில் அருந்ததியர் சமூகத்தின் சமூக, கல்வி நிலை மோசமாக இருப்பதால் அந்த சாதிக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சமநிலையில் உள்ள சமூகங்களுக்கிடையே போட்டியை உருவாக்கி, அவர்களில் திறமையானவர்களை தேர்வு செய்வதுதான் உண்மையான சமூகநீதி. அதற்காக எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு உள் ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்