அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு : ஓ.பன்னீர் செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என புகழ்ந்த எடப்பாடி பழனிசாமி

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்க விழாவில் ஓ.பன்னீர் செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என புகழ்ந்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Update: 2021-01-16 10:14 GMT
மதுரை : 

காணும் பொங்கல் தினமான இன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 

மதுரை அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மதுரை அலங்காநல்லூருக்கு இன்று வருகை தந்தனர். இவர்களுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் ராஜன் செல்லப்பா ஆகியோர் வருகை தந்தனர். முதலில் கோவில் காளைகளுக்கு அவர்கள் மரியாதை செய்தனர். 

இதனை தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் அமைச்சர்களுடன் இணைந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

மாடுபிடிவீரர்கள் ஒரு சுற்றுக்கு 75 பேர் வீதம் தனித்தனி குழுவாக களமிறங்கி வௌகின்றனர். அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவர். அதிக காளைகளை அடக்கும் வீரர்கள், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் இருவரும். தலா ஒரு கார் பரிசாக வழங்குகின்றனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 6-ம் சுற்றகள்  நிறைவு பெற்றுள்ளது. இதுவரை 550க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்துள்ளன. இதுவரை வீரர்களை விட காளைகள் அதிகளவில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி  ஜல்லிக்கட்டு  போட்டியை தொடங்கி வைத்து பேசும் போது கூறியதாவது:-

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுக்கு இடையூறு வந்தபோது, அந்த ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு அம்மாவின் அரசு தூணாக விளங்கி, மிக எழுச்சியோடும் சிறப்போடும் நடைபெறுவதற்கு காரணகர்த்தாகவாக இருந்து, ஜல்லிக்கட்டு நாயகன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய, இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த, மரியாதைக்குரிய அண்ணன் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களே!

பெருந்திரளாக கலந்து கொண்டு ஜல்லிக்கட்டைக் காண வந்திருக்கின்ற பெரியோர்களே! தாய்மார்களே! வீர விளையாட்டில் கலந்து கொண்டு காளைகளை அடக்கவிருக்கின்ற இளைஞர் சிங்கங்களே! பத்திரிகையாளர்களே! ஊடக நண்பர்களே!அரசு அலுவலர்களே!அனைவருக்கும் முதற்கண் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இந்த மண் அனைவராலும் பாராட்டப்படக்கூடிய மண்ணாகும். இந்த மண்ணிலே பிறந்த அத்தனை இளஞ்சிங்கங்களும், சீறி வருகின்ற காளைகளை பிடித்து அடக்குவதற்கான பக்குவத்தோடு இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு சீறி வருகின்ற காளைகளை அடக்குகின்ற இளைஞர்கள் பட்டாளம் நிறைந்த இந்த ஜல்லிக்கட்டு விழா உலகப் புகழ்பெற்ற விழா என்று சொன்னால் அது மிகையாகாது. உலக மக்கள் அனைவரும் காணக்கூடிய இந்த வீர விளையாட்டை, நம்முடைய கலாச்சார பண்பாட்டை, பாரம்பரியம் மிக்க பண்பாட்டைக் காக்கக் கூடிய ஜல்லிக்கட்டு விளையாட்டை, மாண்புமிகு அம்மாவின் அரசுதான் நிலைநிறுத்துகிறது என்பதைப் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். இந்த வீர விளையாட்டில் கலந்து கொண்டிருக்கிற அனைத்து இளைஞர் பெருமக்களுக்கும், அதோடு, வீரமிக்க காளைகளை வளர்த்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், வருகை தந்திருக்கின்ற அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்,' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்