மழையால் விவசாயிகள் பாதிப்பு: நிவாரணம் வழங்க கி.வீரமணி வலியுறுத்தல்

மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-01-16 22:31 GMT
கோப்புப்படம்
சென்னை, 

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் விழா இந்த ஆண்டு மகிழ்ச்சி பொங்க கொண்டாடவேண்டியதற்கு பதிலாக, விவசாயிகள் துயரம் துடைக்கப்பட முடியாத துன்ப வெள்ளத்தில் மூழ்கி வெளியே வரமுடியாமல் தவிப்பது வேதனையாக உள்ளது. பயிர் அறுவடை செய்வதற்கு தயாரான நிலையில், கடும் மழை எதிர்பாராமல் தொடர்ந்து பெய்த காரணத்தால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிட்ட விவசாயிகளின் வேதனை வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியாத மிகப்பெரிய அவலமும், பரிதாபமும் உள்ளது.

முதலில் ஒரு இடைக்கால நிவாரண உதவியையாவது, தமிழக அரசு பாதிக்கப்பட்ட அந்த விவசாய குடும்பத்தினருக்கு போர்க்கால அடிப்படையில் முதல் உதவியைப்போல செய்வதற்கு ஒரு அவசரத் திட்டம் தீட்டப்பட வேண்டாமா? உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சுவதில்லை என்ற நிலையில் இருந்து விவசாயிகள் என்று மீளுவார்கள்? மத்திய-மாநில அரசுகள் மனிதநேயத்தோடு மக்களாட்சியில் நடந்துகொள்ள வேண்டாமா? விவசாயிகளின் கண்ணீர் எரி மலையாவதற்குள் பரிகாரம் காணவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்