மறைந்த புற்றுநோய் மருத்துவர் சாந்தாவுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

மறைந்த புற்றுநோய் மருத்துவர் சாந்தாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-19 05:11 GMT
சென்னை,

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு வயது 93. இவர் ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர் ஆவார்.

இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் சாந்தா சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப்புகழ் பெற்றவர் டாக்டர் சாந்தா. அவர் தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்ம விபூஷண் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக 60 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய சாந்தா, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியில் இந்திய அளவில் முன்னோடியாக கருதப்படுகிறார். 

இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “உயர்தர புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான சிறந்த முயற்சிகளுக்காக டாக்டர் வி.சாந்தா நினைவுகூரப்படுவார். சென்னை அடையாரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் முன்னணியில் உள்ளது. 2018 ஆம் ஆண்டு நான் அங்கு சென்றதை நினைவுகூர்கிறேன். மருத்துவர் வி.சாந்தாவின் மறைவை எண்ணி வருந்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மருத்துவர் சாந்தாவின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, இனி எவராலும் அவரது இடத்தை நிரப்ப முடியாது” என்று தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர் சாந்தாவின் தன்னமலற்ற சேவையை கவுரவிக்கும் விதமாக அவரது இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்