புதுச்சேரி மாணவர்களின் மருத்துவ கல்வி இடஒதுக்கீடு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி மாணவர்களின் மருத்துவ கல்வி இடஒதுக்கீடு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-01-22 07:52 GMT
சென்னை,

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது' என்று புதுச்சேரியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியின் தாயார் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய பாஜக அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சகம், குடும்ப நல அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் அனைத்தும் ஓரணியில் நின்று, 'அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது, கல்வியின் தரத்தைப் பாதிக்கும்' என, 'தரத்தைப்' பற்றி நீண்டகாலமாக, பொதுவெளியில் வைக்கப்படும் சொத்தை வாதத்தைச் சென்னை உயர் நீதிமன்றத்திலும் முன்வைத்திருப்பது, இளைஞர்களுக்கு அநீதி இழைப்பதாகும்.

நீட் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துக் கல்விக் கனவைச் சிதைத்துக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு - அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குப் புதுச்சேரி மாநில அரசு வழங்க முன்வந்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் தடுத்து நிறுத்திட, அம்மாநிலத் துணைநிலை ஆளுநருடன் சேர்ந்து சூழ்ச்சி செய்கிறது.

குறிப்பாக, 'இந்த ஆண்டு அந்த இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வாய்ப்பே இல்லை' என்று மத்திய பாஜக அரசு வாதிடுவது, அக்கட்சித் தலைமையிலான ஆட்சிக்கு சமூக நீதிக் கொள்கைகள் மீதும் - இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் மீதும் - பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்று முன்னேற மேற்கொள்ளும் முயற்சிகளின் மீதும் - இருக்கும் நீங்கா வெறுப்புணர்வைக் காட்டுகிறது.

இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆதரவு போல் ஒருபுறம் வேடம் போட்டு, இன்னொரு புறம், ஏதாவது ஒரு வகையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஒழித்து விடத் துடிக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில், மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுத்து, சமூக நீதியை எப்படியெல்லாம் காயப்படுத்திச் சாய்த்திட முடியுமோ அப்படியெல்லாம் செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் திமுக ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீட்டை வழங்காமல் மாநில ஆளுநர் கிடப்பில் போட்டிருந்தார். திமுகவின் போராட்டத்தாலும் - உயர் நீதிமன்றத்தின் உத்தரவாலும் - நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார்.

அவ்வாறு ஒப்புதல் அளித்தபோது தமிழக ஆளுநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தமிழக அரசின் மசோதா மீது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் 26.9.2020 அன்று கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 29.10.2020 அன்று அவர் தனது கருத்தினை அளித்தார்' என்று கூறியதோடு நில்லாமல், ஆளுநரின் செயலாளர், சொலிசிட்டர் ஜெனரலுக்கு எழுதிய கடிதத்தையும், அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் அளித்த கருத்தையும் பொதுமக்கள் பார்வைக்கு இணைத்தே வெளியிட்டிருந்தார்.

தமிழக ஆளுநரின் அந்தச் செய்திக்குறிப்பில் இடம் பெற்றுள்ள கருத்துரையில், 'நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா அரசியல் சட்டப்படி இருக்கிறது என்று மிகத் தெளிவாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்திருக்கிறார். இதன் அடிப்படையில்தான் ஆளுநர், தமிழக அரசின் மசோதாவிற்கு 30.10.2020 அன்று ஒப்புதல் அளித்தார்.

தமிழக அரசின் மசோதா அரசியல் சட்டப்படி இருக்கிறது என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலே கூறியிருக்கும்போது, அவரின் கீழ் பணிபுரியும் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டரும், மத்திய அரசின் பல்வேறு துறைகளும் எப்படி புதுச்சேரி மாநில அரசு வழங்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாறுபாடான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்? குறிப்பாக, தமிழக மசோதா தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றமே தடை விதிக்க முடியாது என்று மறுத்து விட்டது.

இந்நிலையில் - புதுச்சேரி மாநில விவகாரத்தில் இப்படியொரு நிலைப்பாட்டை உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்து - தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் போராடிப் பெற்ற 7.5 சதவீத இட ஒதுக்கீட்டைச் சீர்குலைக்க மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற அடிப்படையான சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய பாஜக அரசு, தமிழக மாணவர்களின் எதிர்காலத்துடன் அப்படியொரு விபரீத விளையாட்டை நடத்திடக் கனவிலும் நினைக்கக் கூடாது.

தமிழகத்திலும் - புதுச்சேரியிலும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மீது - குறிப்பாக, மருத்துவக் கல்வி கற்க வேண்டும் என்று கருதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மீது இருக்கும் வெறுப்புணர்வை மத்திய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், புதுச்சேரி மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, இந்த ஆண்டே புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வியில் முன்னுரிமை இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

'விளம்பர மோகத்தில்' மயங்கிக் கிடக்கும் முதல்வர் பழனிசாமி, மத்திய அரசின் புதிய நிலைப்பாட்டால் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எவ்வித ஆபத்தும் வந்திடாதவாறு - மிகவும் விழிப்புடன் இருந்து பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்