மசினகுடியில் காட்டு யானைக்கு தீ வைத்து கொடுமைப்படுத்திய 2 பேர் கைது

மசினகுடியில் படுகாயங்களுடன் உயிரிழந்த காட்டு யானைக்கு தீ வைத்து கொடுமைப்படுத்திய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2021-01-22 22:28 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் (வெளி மண்டலம்) மசினகுடி பகுதியில் கடந்த சில மாதங்களாக சுமார் 40 வயதான ஆண் காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றி வந்தது. அதற்கு வனத்துறையினர் பழங்களுக்குள் மருந்து மாத்திரைகளை மறைத்து வைத்து தொடர்ந்து வழங்கி வந்தனர். இருப்பினும் குணமடையவில்லை.

இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன் அந்த காட்டு யானையை பிடித்து காயத்துக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் குணமாகவில்லை. இந்த நிலையில் கடந்த 1 வாரத்துக்கு முன்பு மரவகண்டி நீர்த்தேக்கத்துக்குள் காட்டு யானை தண்ணீருக்குள் நின்றவாறு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் காட்டு யானையை பார்வையிட்டபோது இடது பக்க காதில் பலத்த தீக்காயம் இருப்பதையும், காதின் சிறிய பகுதி துண்டாகி கீழே விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 19- ம் தேதி காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளிக்க லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து சிங்காரா வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிலரைப் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் காட்டு யானைக்கு சிலர் தீ வைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக வெளியானது. மசினகுடி மாவனல்லா பகுதியில் இரவு தனியார் விடுதி அருகே காட்டு யானை வந்தபோது சிலர் பழைய டயர்களுக்கு தீ வைத்து காட்டு யானை மீது வீசினர். இதில் வலி தாங்க முடியாமல் காட்டு யானை பயங்கரமாக பிளிறியவாறு அங்கிருந்து ஓடிச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், வனச்சரகர்கள் காந்தன், மாரியப்பன் உள்ளிட்ட வனத்துறையின் தனிப்படையினர் விசாரணை நடத்தினார்கள்.

அதில் மசினகுடி தர்கா ரோட்டை சேர்ந்த பிரசாத் (வயது 36), மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ரேமண்ட் டீன் (28) , ரிக்கி ராயன் (31) ஆகிய 3 பேர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் பிரசாத், ரேமண்ட் டீன் ஆக 2 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறும்போது, காட்டு யானைக்கு தீ வைத்து கொடுமைப்படுத்திய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஒருவரை தேடி வருகிறோம். இதுபோன்று ஈவு, இரக்கம் இல்லாமல் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்கிடையில் காட்டுயானைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்த தனியார் விடுதிக்கு, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜனார்த்தனன், ஊராட்சி செயலாளர் கிரண் மற்றும் வனத்துறையினர் சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்