அனுமதியின்றி சுற்றுப்பயணம்: கருணாஸ் எம்.எல்.ஏ.வின் வாகனம் பறிமுதல்

அனுமதியின்றி சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் கூறி கருணாஸ் எம்.எல்.ஏ.வின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-01-24 23:10 GMT
திண்டிவனம்,

முக்குலத்தோர் புலிகள் படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. தேசிய தெய்வீக யாத்திரை என்கிற 6 நாட்கள் சுற்றுப்பயணத்தை சென்னையில் இருந்து நேற்று தொடங்கினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வந்த அவரது காரை, போலீசார் வழிமறித்தனர்.

இதுபற்றி போலீசாரிடம் கருணாஸ் எம்.எல்.ஏ. கேட்ட போது, உங்களுக்கு யாத்திரை செல்ல அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, யாத்திரைக்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீசார் கைப்பற்றி திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.

இதை கண்டித்து, அவருடன் வந்த தொண்டர்கள் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், முறையாக அனுமதி பெற்று அந்த வாகனத்தை பெற்றுக்கொள்வதாக போலீசாரிடம் கருணாஸ் எம்.எல்.ஏ. கூறிவிட்டு அங்கிருந்து தனது காரில் உளுந்தூர்பேட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்