சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

நெல்லை மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய சுப்பிரமணியராஜா என்பவர் கழகத்தின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-01-27 11:05 GMT
சென்னை: 

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா  கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவருக்கு தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டன. கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை.இந்நிலையில் பெங்களூரு சிறை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தபடி சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார்.  

முன்னதாகவே இதற்கு கர்நாடக போலீஸ் துறை அனுமதி வழங்கிவிட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் காலை 11 மணி அளவில் விக்டோரியா மருத்துவமனைக்கு வந்து சசிகலாவை சந்தித்தனர்.  அவரிடம் விடுதலை செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர். கையொப்பம் பெற்று, நகலை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். 

இந்த நிலையில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்  ஒட்டிய  நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியராஜா என்பவர் கழகத்தின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது. 

அ.இ.அ.தி.மு.கவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே வருக என சசிகலா புகைப்படத்தோடு நெல்லை மாநகர மாவட்டத்தினுடைய இணை செயலாளர் எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த சுப்பிரமணியராஜா சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார்.  இந்த நிலையில் கட்சி அலுவலகத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில் கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி களங்கம், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காணத்தினால் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியராஜா இன்று முதல் கழகத்தின் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கட்சி சார்ந்தவர்கள் உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்