சமூகவலைதள தகவல்களுக்கு தணிக்கை கோரி வழக்கு: யூ-டியூப், கூகுள், முகநூல் நிறுவனங்கள் பதில் அளிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களுக்கு தணிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில் யூ-டியூப், கூகுள், முகநூல் நிறுவனங்கள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. நெல்லையை சேர்ந்த உமாமகேசுவரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

Update: 2021-01-27 20:14 GMT
மதுரை,

சென்னையில் தவறான வார்த்தைகளில் கேள்விகளை பொதுமக்களிடம் கேட்டு யூ-டியூப் சேனலில் வீடியோ பதிவிட்டதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் அவர்களது யூ-டியூப் சேனல் தடைசெய்யப்பட்டது. இருந்த போதும் அவர்களது வீடியோக்கள் பல விதமான சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

நம் நாட்டை பொறுத்தவரை சமூக வலைதளங்களுக்கு உரிய கட்டுப்பாடுகள் இல்லை. இதனால் பெண்கள், குழந்தைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

தற்போது கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு அதிகப்படியாக செல்போன்களை பயன்படுத்துவதால் சமூகவலைதளங்களை உபயோகிக்க வாய்ப்பு உள்ளது. அதில் ஆபாசம் நிறைந்த படங்கள், வார்த்தைகள் நிறைய வருவதால் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

யூ-டியூப், முகநூல் மற்றும் சில சமூகவலைதளங்களில் நேரலை செய்யக்கூடிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலும் உண்மைக்கு புறம்பான விஷயங்களை நேரலை என்று கொடுத்து வருகின்றனர்.

எனவே சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள், கருத்துகளை தணிக்கை செய்ய வேண்டும்.

மேலும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கட்டுப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் வழிமுறைப்படுத்தவும், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, “யூ-டியூப், முகநூல், கூகுள் மற்றும் சமூக வலைதளங்கள் தங்களுக்கான தணிக்கையை தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். புகார்கள் ஏதேனும் வரும் பட்சத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, யூ-டியூப், முகநூல், கூகுள் ஆகிய நிறுவனங்கள் இந்த வழக்கு குறித்து பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

மேலும் செய்திகள்