ஜெயலலிதா நினைவிட சிறப்பு அம்சங்கள்

ஜெயலலிதா நினைவிடத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் வருமாறு:-

Update: 2021-01-28 00:23 GMT
* ‘எத்தனை முறை விழுந்தாலும், பீனிக்ஸ் பறவையை போன்று மீண்டெழுந்து வருவோம்' என்று அ.தி.மு.க.வினரை ஊக்குவிக்கும் வகையில் ஜெயலலிதா பேசுவது வழக்கம். எனவே அவருடைய நினைவிட கட்டிடம் பீனிக்ஸ் பறவை சாயலில் உலகத்தரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

* நினைவிடத்தில் 3 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவரது சமாதிக்கு மேல்பரப்பில் பீனிக்ஸ் பறவை கட்டிடம் அமைந்துள்ளது. சமாதியின் இடது பக்கத்தில் 8 ஆயிரத்து 555 சதுர அடியில் அருங்காட்சியகமும், வலது பக்கத்தில் அதே அளவில் அறிவுத்திறன் பூங்காவும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த 2 கட்டிடங்களிலும் உள்கட்டமைப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

* கட்டப்படும் அருங்காட்சியகத்தில் ஜெயலலிதாவின் மெழுகு சிலை, அவரது கலை மற்றும் அரசியல் துறையின் சாதனை பயணங்களின் புகைப்பட தொகுப்பு, அவர் பெற்ற விருதுகள் போன்ற புகைப்பட தொகுப்புகள் ‘டிஜிட்டல்' வடிவில் இடம் பெற உள்ளன. அறிவுசார் பூங்காவில் தன்னம்பிக்கை ஊட்டும் ஜெயலலிதாவின் பேச்சு தொகுப்புகள், அவர் சொல்லிய குட்டி கதைகள் போன்ற அவரது பேச்சுகள் ‘டிஜிட்டல்' வடிவில் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.

* ஜெயலலிதா சமாதி விலை உயர்ந்த கிரானைட் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. சமாதியின் மீது ‘மக்களால் நான்... மக்களுக்காகவே நான்...', 'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற ஜெயலலிதாவின் பொன்மொழிகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு உள்ளன.

* நினைவிடம் செல்லும் நுழைவுவாயிலில் பீடத்துடன் கூடிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. சமாதிக்கு செல்லும் நுழைவுவாயில் முன்பு அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கருங்கற்களால், கம்பீர தோற்றத்துடன் சிங்கம் சிலை வடிவமைத்து நிறுவப்பட்டு உள்ளது.

* ஜெயலலிதா நினைவிடத்துக்கு உள்ளே செல்வதற்காக 2 பக்கவாட்டிலும் 110 அடி நீளத்துக்கு மேற்கூரையுடன் கூடிய நவீன நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேற்கூரைகள் மீது சூரிய ஒளிதகடு (சோலார்) பொறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் ஜெயலலிதா நினைவிட பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

* தோட்டக்கலை வல்லுனர்கள் ஆலோசனையின்பேரில், நீர் தடாகங்களுடன் சுற்றுச்சூழலை பறைசாற்றும் வகையில் பல்வேறு அழகிய செடிகளும், மரங்களும் நடப்பட்டு உள்ளன. ‘மியாவாக்கி' தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.

* மெரினா கடற்கரையையொட்டி நினைவிடம் அமைந்துள்ளதால் தட்பவெப்பம், உப்பு காற்றால் கட்டிடம் பாதிக்காத வகையில் பாலியூரிதீன் ரசாயனம் பூசப்பட்ட கான்கிரீட் மேற்பரப்புகள் போடப்பட்டுள்ளன.

* எம்.ஜி.ஆர். சமாதியில் உள்ளதுபோன்று ஜெயலலிதா சமாதியிலும் அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

* உயர்தர பளிங்கு கற்கள், கிரானைட் கற்கள், கண்ணாடி பீடம், புல்தரைகள், நீர் தடாகங்கள், அழகிய செடி, மரங்கள், வண்ணவண்ண ஜொலிக்கும் விளக்குகள் என்று இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாதலம் போன்று ஜெயலலிதா நினைவிடம் காட்சியளிக்கிறது.

மேலும் செய்திகள்