தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதமாக நிறுத்தப்பட்ட 600 குளிர்சாதன பஸ்களை மீண்டும் இயக்க திட்டம்

குளிர்சாதன வசதியுள்ள அரசு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2021-02-05 11:29 GMT
சென்னை,

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பஸ் போக்குவரத்து தொடங்கியது. ஆனாலும் குளிர்சாதன வசதியுள்ள பஸ்களை இயக்க அனுமதி அளிக்கவில்லை.

தற்போது அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள 70 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பஸ்களும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. ஆனால் அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட ஏசி பஸ்கள் 10 மாதமாக ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பராமரிக்கும் வகையில் அவ்வப்போது பணிமனைக்குள் இயக்கப்படுகிறது.

இந்தநிலையில் ஓடாமல் உள்ள அரசு ஏசி பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு போக்குவரத்து கழகங்கள் தயாராகி வருகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மட்டும் 340 ஏசி பஸ்கள் உள்ளன.

மற்ற போக்குவரத்து கழகங்களிலும் குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படாமல் இருப்பதால் போக்குவரத்து கழகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் குளிர்சாதன வசதியுள்ள அரசு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல வருகிற திங்கட்கிழமை முதல் 9, 11-ம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதால் சென்னையில் பஸ் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் கூடுதலாக பஸ்களை இயக்கவும் தயார் நிலையில் மாநகர போக்குவரத்து கழகம் உள்ளது. தற்போது 2600 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் 20 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். மாணவர்கள் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்