அமைச்சர் பற்றி கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர கவர்னர் அனுமதி

அமைச்சர் பற்றி கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர கவர்னர் அனுமதி.

Update: 2021-02-12 23:00 GMT
சென்னை, 

தமிழக பொதுத்துறை முதன்மை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) பி.செந்தில்குமார் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக எதிர்க்கட்சித்தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 10-ந்தேதியன்று சென்னை ராயபுரம் தனலட்சுமி பள்ளி வளாகத்தில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் மக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரை பற்றி கருத்துகளை தெரிவித்தார். அமைச்சர் டி.ஜெயக்குமாரின் நற்பெயருக்கு பாதிப்பை விளைவிக்கும் என்று தெரிந்தும் அவரை பற்றிய அவதூறான கருத்துகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அவரது இந்த பேச்சு குறித்து ஆய்வு செய்து பார்த்ததில் அது அவதூறாக பேசப்பபட்டுள்ளதாக அரசு கண்டறிந்தது. அதில் உண்மையும் இல்லை. நல்லெண்ணத்தில் பேசப்படவும் இல்லை.

மு.க.ஸ்டாலின் பேசியது, இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.சி.) 499 மற்றும் 500-ம் பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் மீது புகார் அளித்து, அவதூறு குற்ற வழக்கு தாக்கல் செய்ய, சென்னை நகர அரசு வக்கீலுக்கு கவர்னர் அனுமதி அளித்துள்ளார். அதற்கான அரசாணை வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்