தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல்; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட்டுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2021-02-14 11:06 GMT
அமைச்சரவை கூட்டம்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் கூடியது. .தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் கூட உள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பு அமைச்சரவை கூடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில், உணவுத் துறை அமைச்சர் காமராஜ் உடல்நிலை காரணமாக பங்கேற்கவில்லை. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சில அரசுத் துறை செயலாளர்கள் உடனிருந்தனர்.

ஒப்புதல்
சட்டசபை கூடும்போது தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதில், புதிய திட்டங்கள், ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு போன்றவை இடம்பெறும். மேலும், புதிய செலவுகள்-வரவுகள் பற்றிய அம்சங்களும் அதில் இடம்பெறும். அதற்கான ஒப்புதல், இந்த அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

தொழில் விரிவாக்கம்
புதிய தொழில் திட்டங்கள், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான நிதி ஆதாரம், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்குவதற்கான நிதி ஆதாரம் ஆகியவற்றுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தமிழகத்தில் புதிதாக தொழில்கள் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளுக்கான விரிவாக்கத்துக்கும் அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்