புதிய திட்டங்கள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பயன்தரக்கூடியது - பிரதமர் மோடி

புதிய திட்டங்கள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பயன்தரக்கூடியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-17 12:34 GMT
தூத்துக்குடி, 

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலான ரூ.700 கோடி மதிப்பில் அமைய உள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று மாலை தொடங்கி வைத்தார். 

இதன்படி ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி வரை 143 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்பட உள்ளது. நாகப்பட்டினம் பனங்குடியில் ரூ.31,500 கோடி மதிப்பில் அமைய உள்ள காவிரிப் படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். புதிய சுத்திகரிப்பு நிலையம் ஆண்டுக்கு 9 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்டது

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் சென்னை மணலி பெட்ரோலியம் நிறுவன கேசோலின் சல்பர் நீக்கப் பிரிவு திட்டம் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது. 

இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவில் எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது. உள்நாட்டு தேவையை நிறைவு செய்ய 85 சதவீதம் எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் உள்நாடு, வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்னிந்தியாவில் பல்வேறு பகுதிகள் பயன்பெறும்

புதிய திட்டங்கள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பயன்தரக்கூடியது. விவசாயிகள் பயன் தரும் வகையில் எத்தனால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. சோலார் பம்புகள் விவசாயிகளுக்கு பெரும் அளவு பயன் அளிக்கிறது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்