கோவை அருகே தொண்டாமுத்தூரில் கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது

தொண்டாமுத்தூரில் கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

Update: 2021-02-19 03:16 GMT
ஆனந்தன்
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வங்கியில் கடன்
கோவை அருகே தொண்டாமுத்தூரில் உள்ள தீனம்பாளையம் சிம்சன் நகரை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 29). விவசாயி. இவருடைய மனைவி கோகிலா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனந்தன், உலியம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். மேலும் எலெக்ட்ரீசியனாகவும் வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையில் அவர் சொந்த வீடு கட்டுவதற்காக ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வருமானம் சரிவர இல்லாததால், வாங்கி கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

தற்கொலை
ஆனால் கடனை திரும்ப செலுத்தக்கோரி சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் மூலம் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடன் தொல்லையால் சிரமப்பட்டு வந்த ஆனந்தன், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தொண்டாமுத்தூர் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தேன். ஆனால் வங்கி அதிகாரிகள் கடனை திரும்ப செலுத்த தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், இந்த முடிவை எடுக்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது. அதை கைப்பற்றி போலீசாார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் 
சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்