அரசு பேச்சுவார்த்தைக்கு மறுத்தால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்; போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களை அரசு அழைத்து பேச மறுத்தால் வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்துவோம் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன. நிர்வாகத்தினர் 56 சதவீதம் பஸ்களை நேற்று இயக்கியது.

Update: 2021-02-26 00:00 GMT

போக்குவரத்து கழக வேலைநிறுத்தம்

ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அரசுக்கு ஆதரவான தொழிற்சங்கங்கள் மூலம் 56 சதவீதமான பஸ்களை நிர்வாகம் இயக்கியது. இதுபோதுமானதாக இல்லாததால் அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் ஷேர் ஆட்டோ உள்ளிட்ட பிற வகை போக்குவரத்தை நாடி சென்றனர்.

தொழிற்சங்கங்கள் ஆலோசனை

தொ.மு.ச. பொருளாளர் நடராஜன் தலைமையில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவனை நேற்று காலையில் சந்தித்து தங்களுடைய கோரிக்கைகளை எடுத்து கூறினார்கள். பின்னர் பல்லவன் சாலையில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் எம்.சண்முகம் எம்.பி., தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதுகுறித்து எம்.சண்முகம் எம்.பி. கூறியதாவது:- போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால் வேலைநிறுத்தமும் தொடரும், அத்துடன் பயிற்சி இல்லாத டிரைவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்களை அழைத்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்திருப்பதால் நாளை (இன்று) காலை 10 மணிக்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பணிமனைகள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அத்துடன் மாலை 4 மணிக்கு பல்லவன் சாலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு அழைத்து பேச வேண்டும்

இதுகுறித்து சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

வேலைநிறுத்தம் முழுமையாக நடக்கிறது. வேலை நிறுத்தத்தை உடைப்பதில் காட்டுகிற அக்கறையை பேசி தீர்ப்பதில் காட்டினால் முடிவுக்கு வரவாய்ப்பு உள்ளது. இதைத்தான் தொழிற்சங்கங்களும் விரும்புகின்றன. தீபாவளி மற்றும் பொங்கல் காலங்களிலேயே இந்த வேலைநிறுத்தத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் தவிர்த்து வந்து உள்ளோம். வேலைநிறுத்த அறிவிப்பு வந்த உடனேயே அமைச்சர் பேசி முடிவுக்கு கொண்டு வந்து இருக்கலாம். ஆனால் அதற்கு அவர்கள் தயார் இல்லாததால் வேலைநிறுத்தத்திற்கு தள்ளப்பட்டு உள்ளோம். தற்போது 20 சதவீத பஸ்கள் மட்டும் ஓடுகின்றன. இதுபோன்ற நடவடிக்கை நீடிக்க முடியாது. அரசு தற்போது அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது எந்தவிதத்திலும் போதுமானது அல்ல.

தொழிற்சங்கத்தின் ஒப்பந்தம் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. எப்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும், எப்போது முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பதை அமைச்சர் அறிவிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு 5 ஆண்டுகளாக பஞ்சப்படி வழங்கப்படவில்லை. வெறும் ஓய்வூதியம் மட்டும் வழங்கப்படுகிறது. இதனையும் முழுமையாக வழங்க வேண்டும். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களை அரசு அழைத்து முறையாக பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டத்தை எல்லாவகையிலும் மனக்கஷ்டத்துடன் தீவிரப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த நாராயணசாமி, எச்.எம்.எஸ். சங்க பொதுச்செயலாளர் எம்.சுப்பிரமணியபிள்ளை, ஏ.ஐ.டி.யு.சி. ஆறுமுகம் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். மத்திய தொழிற்சங்கங்களும் தற்போது ஆதரவு தெரிவித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை

இதுகுறித்து போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப காலை வேளையில் 53 சதவீதமும், பகல் பொழுதில் 56 சதவீதமும் பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல் தமிழகம் முழுவதும் 53.1 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. வேலைநிறுத்தம் தொடர்ந்தால் மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படும்.

பொதுவாக தொழிற்சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கும்போது இதுபோன்று திடீரென்று எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டத்திற்கு புறம்பானதாகும். கோரிக்கையை நிறைவேற்ற நடந்த பேச்சுவார்த்தையின்போது கேட்கப்பட்ட காலஅவகாசத்தை தொழிற்சங்கங்கள் வழங்க மறுத்துவிட்டன. பணிக்கு வராத பணியாளர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் நலன் கருதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்கள்.

 

மேலும் செய்திகள்