3 நாட்களாக நடந்து வந்த பஸ் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக நடந்து வந்த பஸ் ஊழியர்கள் போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.

Update: 2021-02-28 04:50 GMT
சென்னை,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.

இதனால், கடந்த 3 நாட்களாக முழு அளவிலான பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்து வந்தனர். வேலைநிறுத்தம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் திடீரென சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, நேற்று அவசர அவசரமாக போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமிகாந்தன் முன்னிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் மற்றும் 9 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தேர்தலை முன்னிட்டு கைவிடப்படாது என்றும், தொடர்ந்து நடத்தப்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதேபோன்று, போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட இடைக்கால நிவாரணத்தொகையான மாதம் ரூ.1,000 வழங்கப்படுவதை கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

மேலும், போராட்டம் நடத்தப்பட்ட 3 நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டன.

போராட்டம் வாபஸ் பெற்றது குறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

3 நாட்களாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து இருப்பதால் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என பேச்சுவார்த்தையின்போது கேட்டுக்கொண்டனர். அதே போல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட சில அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால் இப்போது போராடினால் நியாயம் கிடைக்காது போராட்டத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதன்படி, 3 நாட்களாக நடந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எனவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழக்கமாக அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்