வருமானவரி சோதனை: டைல்ஸ் நிறுவனத்தில் கணக்கில் வராத ரூ.220 கோடி கண்டுபிடிப்பு

டைல்ஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் கணக்கில் வராத ரூ.220 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-03-01 02:22 GMT
சென்னை, 

சென்னையில் உள்ள கே.ஏ.ஜி.டைல்ஸ் நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக வருமானவரி சோதனை நடந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய நேரடி வரி வாரியத்தின் கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் அமைந்துள்ள பிரபல டைல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தமிழகம், குஜராத் மற்றும் கொல்கத்தா நகரங்களில், 20 இடங்களில் வருமான வரித்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனம் டைல்ஸ் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் நடந்த முதல் நாள் சோதனையில், கணக்கில் வராத விற்பனை மற்றும் கொள்முதல் செய்ததற்கான ஆவணங்கள் கிடைத்து உள்ளன. வருமானவரி அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், கணக்கில் வராத ஆவணங்களை மறைத்து வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ரகசிய அலுவலகம் மற்றும் கணினி மென்பொருட்களில் பதிவு செய்து பாதுகாக்கப்பட்ட வருமானம் தொடர்பான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

ரூ.220 கோடி வருவாய்

இந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டு நடந்த விற்பனை பரிவர்த்தனையில் 50 சதவீதம் கணக்கில் இல்லாததும், ரூ.120 கோடி வரை வருமானத்தை மறைத்திருப்பதும் தெரியவந்தது. அத்துடன் ரூ.100 கோடி வரை கணக்கில் வராத வருவாயை பங்குகளில் முதலீடு செய்திருப்பதற்கான ஆவணங்களும் சிக்கின. இதன்மூலம் இந்த நிறுவனம் கணக்கில் வராத ரூ.220 கோடியை வருமானமாக பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் ரூ.8.30 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அங்கு தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

தேர்தல் நேரம் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பான சோதனை மற்றும் கண்காணிப்பு பணியும் மூடுக்கி விடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்