கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2021-03-01 03:24 GMT
சென்னை,

மருத்துவ நிபுணர்கள் குழு, பொது சுகாதார நிபுணர்கள், மத்திய அரசு ஆகியோரின் பரிந்துரைகளுக்கு ஏற்ப தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக பிப்ரவரி 28-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருந்தது. அப்போது சில தளர்வுகளும் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து ஆணை பிறப்பிக்கலாம் என்று அரசுக்கு வருவாய்த்துறை ஆணையர் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா பரவலை தீவிரமாக தடுப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மார்ச் 31-ந் தேதி வரை அமல்

அதன்படி, இந்த உத்தரவு மார்ச் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும். இந்த ஊரடங்கு காலகட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்த விமானப் பயணங்கள் தவிர மற்ற அனைத்து சர்வதேச விமானப் பயணங்களுக்கும் தடை நீடிக்கும். கொரோனா தடுப்பு தொடர்பாக முக கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்திருப்பது, சமூக இடைவெளி ஆகியவற்றை அனைவரும் கடைப்பிடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிகளில் ஏற்கனவே வகுத்து அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகம், போலீஸ்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்.

வழிகாட்டு நெறிமுறைகள்

நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், பல்வேறு நடவடிக்கைகளுக்காக அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. பயணிகள் ரெயில், விமானப் போக்குவரத்து, மெட்ரோ ரெயில், பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், விடுதிகள், வணிக வளாகங்கள், மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் கடுமையாக அமல்படுத்த வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், பல்வேறு நோய்கள் பீடித்து இருப்பவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆகியோர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எச்சில் துப்பினால் அபராதம்

ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பயன்படுத்த வேண்டும். பொது இடங்கள், பணியிடங்கள், பயணங்கள் ஆகியவற்றின் போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. பொது இடங்களில் அனைவரும் தேவையான அளவு சமூக இடைவெளியுடன் நடந்துகொள்ள வேண்டும். பொது இடங்களில் அனைத்து கடைகளிலும் நுகர்வோர்களுக்கு இடையே சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும். பணியிடங்களில் உடல் வெப்ப பரிசோதனை, கை கழுவுதல் அல்லது கிருமிநாசினி பயன்பாடு போன்ற வசதிகள் வைக்கப்பட்டு இருக்க வேண்டும். மனிதர்கள் தொடக்கூடிய பகுதிகள் அனைத்தையும் அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும்.

இந்த அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகங்கள் மிகக் கடுமையாக செயல்படுத்த வேண்டும். சமூக இடைவெளி நெறிமுறை முடிந்த அளவு அமல்படுத்தப்பட வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோருக்கு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 51 முதல் 60-ம் பிரிவுகளின் கீழ் தண்டனை விதிக்கப்படும். அதோடு, இந்திய தண்டனைச் சட்டத்தின் 188-ம் பிரிவு உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டனை விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த அரசாணையுடன், ஊரடங்கு உத்தரவுகளை மீறுவோருக்கான தண்டனை விவரங்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்