புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை சோனியா குடும்பத்திற்கு வழங்கினேன் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டு பொய்யானது - நாராயணசாமி

புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை சோனியா குடும்பத்திற்கு வழங்கினேன் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டு பொய்யானது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-01 10:58 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் புதுச்சேரியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு, நாராயணசாமியின் அரசுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி உள்ளது. ஆனால், மக்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் வந்து சேரவில்லை. அந்த பணத்தை, டெல்லியில் உள்ள சோனியா குடும்பத்திற்கு திருப்பி அனுப்பும் வேலையை தான் நாராயணசாமி செய்திருக்கிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை சோனியா குடும்பத்திற்கு வழங்கினேன் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டு பொய்யானது. அமித்ஷா கூறியது என் மீது வைக்கும் மிகக் கடுமையான குற்றச்சாட்டு ஆகும். சிபிஐ, வருமான வரித்துறையை கையில் வைத்துள்ள அமித்ஷாவால் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா? என அவரிடம் நான் சவால் விடுகிறேன். 

அவர் நிரூபிக்கவில்லை என்றால், தேசத்திற்கும் புதுச்சேரி மக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், என்னையும் சோனியா குடும்பத்தையும் களங்கப்படுத்த தவறான தகவல் வழங்கியதற்காக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்