தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

தமிழகத்தில் நேற்று 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கப்பட்டது. முதல் நாளான நேற்று துணை ஜனாதிபதி மற்றும் கவர்னரும் நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Update: 2021-03-02 04:20 GMT
சென்னை,

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதைத்தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கும், தொடர்ந்து போலீசாருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

இந்த நிலையில் 60 வயது மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு தேவையான வழிமுறைகளை சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. இந்தநிலையில் நேற்று தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

துணை ஜனாதிபதி

அந்த வகையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் நேராக தடுப்பூசி போடும் மையங்களில் பதிவு செய்து கொண்டனர். பின்னர் பதிவு செய்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், அம்மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

மேலும் செய்திகள்