மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு விவகாரம்: மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உள்பட 9 பேர் மீது அவமதிப்பு வழக்கு

மருத்துவ படிப்புகளுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உள்பட 9 பேர் மீது தி.மு.க. தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் அவர்கள் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-03-02 04:40 GMT
சென்னை,

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உரிய முடிவெடுக்க மத்திய பொது சுகாதார பணிகள் இயக்குனர், மத்திய சுகாதாரத்துறை, தமிழக சுகாதாரத் துறை செயலாளர்கள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் செயலாளர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்தி 3 மாதங்களில் உரிய முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

இந்த உத்தரவை முறையாகச் செயல்படுத்தவில்லை என்று தி.மு.க. சார்பில் அக்கட்சியின் எம்.பி.யும், செய்தித்தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ஐகோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு அமைத்த குழுவில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இது, கோர்ட்டு அவமதிப்பு ஆகும். இதனால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உள்பட 9 பேருக்கு கோர்ட்டு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பினேன். அவர்கள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

எனவே, மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளர், தமிழக அரசின் தலைமைச்செயலாளர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உள்பட 9 பேர் மீது கோர்ட்டு அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

பதில் அளிக்க உத்தரவு

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன் எம்.பி., ‘2021-2022-ம் ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை குறிப்பேட்டில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் அளிக்கப்பட உள்ள இடஒதுக்கீடு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோன்று, எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி இடஒதுக்கீடு குறித்து உரிய முடிவு எடுக்காவிட்டால் தமிழக மாணவர்களின் நலன் பாதிக்கப்படும்' என்றார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் இறுதி வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்