டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரி வாடகை கட்டணம் 30 சதவீதம் உயர்வு உரிமையாளர்கள் அறிவிப்பு

டீசல் விலை உயர்வு எதிரொலியாக லாரிகளின் வாடகை கட்டணம் 30 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

Update: 2021-03-04 02:20 GMT
சென்னை, 

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு மற்றும் ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை மாதவரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை தனித்தனியாக குறைத்து டீசல் விற்பனையை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் (ஜி.எஸ்.டி.) கொண்டு வர வேண்டும். 15 ஆண்டுகள் பழைய வாகன அழிப்பு நடவடிக்கையை 20 ஆண்டுகளாக நீட்டித்து மாற்றம் செய்திட வேண்டும்.

பழைய வாகன அழிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும், இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கப்பட வேண்டும்.

30 சதவீதம் வாடகை உயர்வு

மத்திய, மாநில அரசுகளே தலைமையேற்று சுங்கச்சாவடி முறைகேடுகளில் ஈடுபடாமல் காலாவதியான சுங்கச் சாவடிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக அகற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அனைத்து சுங்கச் சாவடிகளுக்கும் தனித்தனியாக செலவு செய்த தொகை, இதுவரை வசூலான தொகை, பாக்கி உள்ள தொகை போன்ற முழு விவரங்களுடன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள ‘பாஸ்டேக்' முறைப்படி, பணம் வசூல் செய்த பிறகும் வாகனம் சிறிது தூரம் கடந்த பிறகு ‘பாஸ்டேக்' கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த முறைகேடுகளை அரசு உடனடியாக தடுக்க வேண்டும். மோட்டார் தொழிலுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள இலகுரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வாகனத்திற்கும் இன்று (நேற்று) நள்ளிரவு முதல் தற்போது பெற்று வரும் வாடகையில் இருந்து 30 சதவீதம் வாடகையை உயர்த்தி பெற்றிட இந்த பொதுக்குழு தீர்மானிக்கிறது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்