‘தினமலர்' பத்திரிகை முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி காலமானார் இறுதிச் சடங்குகள் இன்று நடக்கிறது

‘தினமலர்' பத்திரிகை முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் நேற்று காலமானார். இறுதிச் சடங்குகள் இன்று நடக்கிறது.

Update: 2021-03-05 04:28 GMT
சென்னை, 

‘தினமலர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான ஆர்.கிருஷ்ணமூர்த்தி (வயது 88), சென்னையில் நேற்று காலமானார். இந்திய அரசின் உயரிய தொல்காப்பியர் விருது, லண்டன் வரலாற்று அமைப்பின் ஆய்வியல் அறிஞர் விருதுகளை பெற்றவர். சங்ககால நாணயவியலின் தந்தை என போற்றப்படுபவர்.

கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக, ‘தினமலர்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்து, சிறப்புடன் பணியாற்றி, வழிநடத்தியவர். சென்னை பெசன்ட் நகர், காவேரி சாலையில் உள்ள இல்லத்தில், ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் அஞ்சலி

நேற்று, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., தி.மு.க. எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதிமாறன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், நாணயவியல் அறிஞர்கள், தமிழறிஞர்கள், பொது நல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரளாகச் சென்று, அஞ்சலி செலுத்தினார்கள். அவரது இறுதிச் சடங்கு, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.

2-வது மகன்

‘தினமலர்’ நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் - கிருஷ்ணம்மாள் தம்பதியின் 2-வது மகன் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆவார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், தினமலர் சென்னை பதிப்பு ஆசிரியர் கி.ராமசுப்பு, புதுச்சேரி பதிப்பு வெளியீட்டாளர் கி.வெங்கட்ராமன் என்ற 2 மகன்களும், உஷா, வித்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில், 1933-ம் ஆண்டு ஜனவரி 18-ந்தேதி பிறந்தார். நாகர்கோவில் சேது லெக்குமிபாய் பள்ளி என்ற, எஸ்.எல்.பி., பள்ளியிலும், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியிலும் பயின்றார்.

காரைக்குடி மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களில், உயர் கல்வி படித்தார். பின், ‘தினமலர்’ பத்திரிகையில் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். அவரது கல்வித் தகுதியும், வாழ்வியல் அனுபவங்களும், பத்திரிகை ஆசிரியர் பணியை நுட்பமாக்கியது. பல்வேறு தரப்பு மக்களின் வறுமை, சீரற்ற வளர்ச்சி, சமச்சீரற்ற வாய்ப்பு என சமூகத்தின் பல்வேறு அம்சங்களை மனதில் கொண்டு, சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், பத்திரிகை ஆசிரியர் என்ற பணியை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.

ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு

மறைந்த ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பண்டைய நாணயவியல் ஆராய்ச்சிகளில், மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சங்க காலத்தில் தமிழ் நிலப்பகுதியில் ஆட்சி செய்த மன்னர்கள் வெளியிட்ட பல நாணயங்களை கண்டறிந்து, அவற்றை ஆராய்ச்சி செய்து, பல நூல்களும், ஆராய்ச்சி கட்டுரைகளும் வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற ராயல் நாணயவியல் கழகம், 1997-ம் ஆண்டு, ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு, கவுரவ உறுப்பினருக்கான, ‘பெலோ ஆப் ராயல் நியூமிஸ்மேட்டிக் சொசைட்டி’ என்ற உயரிய தகுதி அளித்தது.

விருதுகள் - பரிசுகள்

கொங்கு நாணயவியல் ஆய்வு மையம், கொங்கு ஆய்வு மையம், கலைமகள் கா.மீனாட்சிசுந்தரனார் அருங்காட்சியகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, 1998, ஜூலை 20-ந்தேதி, ஈரோட்டில் பாராட்டு விழா நடத்தி, நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தன.

கடந்த, 1998-ம் ஆண்டு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாராட்டு விழா நடத்தியது. திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம், ‘கபிலவாணர் விருது’ வழங்கி கவுரவித்தது. சென்னை மாநிலக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் பாராட்டு விழா நடத்தியது.

தொல்காப்பியர் விருது

திருச்சி நாணயவியல் ஆய்வு கழகம், 1999-ம் ஆண்டு பிப்ரவரியில் ‘நாணயவியல் ஆய்வுச் செம்மல்’ என்ற பட்டம் வழங்கிக் கவுரவித்தது. இதழியல் தொண்டுகளைப் பாராட்டி, 2000-ம் ஆண்டு ஏப்ரலில், மெட்ராஸ் தெலுங்கு அகாடமி என்ற அமைப்பு, ‘யுகாதி புரஸ்கார் -2000’ என்ற விருது வழங்கி சிறப்பித்தது.

ஸ்ரீரங்கத்தில் உள்ள, ‘செண்பகம் தமிழ் அரங்கு’ என்ற அமைப்பு, 2001-ம் ஆண்டு ஜனவரியில், ‘நாணயவியல் பேரறிஞர்’ என்ற கவுரவத்தை அளித்தது. தமிழ் செம்மொழி என்ற தகுதியைப் பெற முக்கிய சேவையாற்றியதற்காக ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு, இந்திய அரசு, 2012 - 2013-ம் ஆண்டுக்கான, தொல்காப்பியர் விருது வழங்கியது.

கடந்த, 2015-ம் ஆண்டு டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதை வழங்கி, பாராட்டு பத்திரம் அளித்து கவுரவித்தார்.

மேலும் செய்திகள்