வெற்றி மட்டுமே இலக்கு, அதை நோக்கியே நம் பயணம் கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யவேண்டும்

அ.தி.மு.க. தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை ஒருமித்த ஆதரவுடன் வெற்றியடைய செய்யவேண்டும் என்றும், வெற்றி மட்டுமே நம் இலக்கு, அதை நோக்கி யே நாம் செல்லவேண்டும் என்றும் வேட்பாளர் நேர்காணலின்போது எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் பேசினர்.

Update: 2021-03-05 05:03 GMT
சென்னை, 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த வேட்பாளர் நேர்காணல் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சட்டமன்ற தேர்தல் தேதி திடீரென அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் ஒரே நாளில் நேர்காணல் நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஏராளமானோர் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் வாய்ப்பு ஒருவருக்குத்தான் வழங்கப்படும். எனவே கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை ஒருமித்த ஆதரவுடன், ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றியடைய செய்யவேண்டும்.

இந்த தேர்தலில் வெற்றிபெற்றால் அ.தி.மு.க.வை எதிர்க்கும் சக்தி எந்த அரசியல் கட்சிகளுக்கும் இல்லை. ஏனெனில் பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களிடையே நாம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளோம். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் ரத்து, சுய உதவிக்குழு கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை செய்துள்ளோம். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு திட்டத்தால் இன்று அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள்.

வெற்றி மட்டுமே இலக்கு

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. அதனை முறியடித்து ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி வந்திருக்கிறோம். ஜெயலலிதா ஆட்சி நல்லமுறையில் நடந்து வருகிறது. எனவே இந்த தேர்தலில் நாம் ஒன்றிணைந்து பணியாற்றி தேர்தல் வெற்றியை அடையவேண்டும். வெற்றி மட்டுமே இலக்கு, அதை நோக்கியே நம் பயணம் இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தீயசக்தி ஆட்சிக்கு வரக்கூடாது

ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகும், அவர் கொண்டுவந்த நல்ல பல திட்டங்களை எந்தவித சேதாரமும், குறைவில்லாமலும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். இந்த தேர்தலில் பலர் விண்ணப்பித்திருந்தாலும் ஒரு தொகுதிக்கு ஒருவருக்கே வாய்ப்பு தரமுடியும். அதற்காக வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு தகுதியில்லை என்று அர்த்தமாகி விடாது. எல்லோருக்கு உரிய முக்கியத்துவம் வரும் நாட்களில் வழங்கப்படும். தீயசக்தியான தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பது ஜெயலலிதாவின் வாக்கு. அதை ஏற்று, கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு, ஒற்றுமையாக இணைந்து தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்