தமிழகத்தில் இதுவரை 7,62,604 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இதுவரை 7,62,604 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-03-05 17:27 GMT
கோப்பு படம்
சென்னை,

கொரோனாவுக்கு எதிராக உலக அளவில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை கடந்த ஜனவரி 16-ந்தேதி இந்தியா தொடங்கியது. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.

இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக கடந்த 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்களில் நடந்து வரும் இந்த தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று ஒரேநாளில் 92,208 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், 90,266 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 1,942 பேருக்கு கோவேக்‌ஷின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் இதுவரை 44 நாள்களில் மொத்தம் 7,62,604 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்