வங்கிக்கு வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 கோடி பறிமுதல்
அரியலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி வங்கிக்கு வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;
கீழப்பழுவூர்:
வாகன சோதனை
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. மேலும் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் போன்றவை வழங்கப்படுவதை தடுப்பதற்காக பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதன்படி அரியலூர் மாவட்டத்தில் உதவி தாசில்தார் சரவணன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் முக்கியமான இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்கள் சாத்தமங்கலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ.5 கோடி பறிமுதல்
அப்போது கும்பகோணத்தில் இருந்து அரியலூருக்கு தஞ்சை-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேன், பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்பதும், வேனில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.5 கோடி கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தையும், வேைனயும் பறிமுதல் செய்து, அரியலூர் கோட்டாட்சியர் அலுவலத்திற்கு பறக்கும்படை அதிகாரிகள் பாதுகாப்பாக கொண்டு வந்தனர்.
அங்கு தேர்தல் அலுவலரும், அரியலூர் கோட்டாட்சியருமான ஏழுமலை, பணம் இருந்த வாகனத்தில் வந்த பாரத ஸ்டேட் வங்கி உதவியாளர் வினோத்குமார் மற்றும் 2 பாதுகாவலர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
கருவூலத்தில் ஒப்படைப்பு
இதனையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடி மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும், உரிய ஆவணங்களை மாவட்ட பரிசீலனை குழுவிடம் சமர்ப்பித்து, அதற்கான உத்தரவு பெற்ற பின்னர் மாவட்ட கருவூலத்தில் இருந்து ரூ.5 கோடியை பெற்றுக்கொள்ளுமாறும் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். அதன்படி ரூ.5 கோடியும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வங்கிக்கு உரிய ஆவணங்கள் இன்றி ரூ.5 கோடி கொண்டு சென்றது பொதுமக்களிடம் பலவித சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
கடந்த வாரம் இதே பகுதியில் அ.ம.மு.க. சார்பில் கொண்டு செல்லப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான 3,520 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.