தொலைத்தொடர்பு ஊழியர்கள் கூட்டுறவுச்சங்கத்தின் நிலத்தை விற்பனை செய்ய இடைக்கால தடை ஐகோர்ட்டு உத்தரவு

தொலைத்தொடர்பு ஊழியர்கள் கூட்டுறவுச்சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-03-07 21:01 GMT
சென்னை, 

தொலைத்தொடர்பு ஊழியர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் கடந்த 2004-2005-ம் ஆண்டுகளில், திருவள்ளூர் மாவட்டம் வெள்ளனூரில் 95.55 ஏக்கர் நிலம் ரூ.15 கோடியே 97 லட்சத்துக்கு வாங்கப்பட்டது.

இதற்காக தனியார் வங்கியில் வாங்கிய கடனும் திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது.

இதற்கிடையில், 7 ஏக்கர் நிலத்தை சாலை விரிவாக்கத்துக்காக நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்திக் கொண்டது. மீதமுள்ள நிலத்தை சங்க உறுப்பினர்களுக்கு வீடு கட்டுவதற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக உறுப்பினர்களிடம் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

நிலம் விற்பனை

இதற்கிடையில் 2014-ம் ஆண்டு நடந்த கூட்டுறவு தேர்தலில் வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர். இவர்களது பதவிக் காலம் கடந்த 2019-ம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், தேர்தல் நடத்துவதற்கு காலம் தாழ்த்தி, அவர்களே சங்கத்தை நிர்வகித்து வருகின்றனர்.

மேலும் கடந்த 2017-ம் ஆண்டு செயலாளருக்கு நிலத்தின் மீதான பொது அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 14.5 ஏக்கர் நிலத்தை பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.15.44 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.

நடவடிக்கை

தொலைத்தொடர்பு ஊழியர்கள் நலனுக்காக வாங்கப்பட்ட இந்த நிலத்தை விற்பனை செய்து பெருமளவு மோசடி நடந்துள்ளது.

இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகளுக்கும், வருமானவரித் துறைக்கும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, தொலைத்தொடர்பு ஊழியர்களுக்கான நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்த சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

சங்கத்தின் நிலத்தை விற்பனை செய்யவும், சங்கத்தை நிர்வகிக்க முந்தைய நிர்வாகிகளுக்கும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

தடை விதிப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கத்தின் நிலத்தை விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்