திருப்பூரில், நூல் விலை உயர்வை கண்டித்து 10 ஆயிரம் பனியன் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டம்

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் 10 ஆயிரம் பனியன் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக ரூ.200 கோடிக்கு பின்னலாடை வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

Update: 2021-03-15 23:00 GMT
திருப்பூர், 

பின்னலாடை தயாரிப்பிற்கு முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. ஆனால் தற்போது நூல் விலை உயர்வால் இந்த தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே திருப்பூரில் தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து ஒருநாள் அடையாள பனியன் உற்பத்தி போராட்டம் மற்றும் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

10 ஆயிரம் நிறுவனங்கள்

அதன்படி நேற்று திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பனியன் நிறுவன தொழிலாளர்கள், உரிமையாளர்கள், தொழிற்சங்கத்தினர் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

நூல் விலை உயர்வை கண்டித்தும், இதனை கட்டுப்படுத்தக்கோரியும் கோஷமிட்டனர். இதையொட்டி திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மட்டும் 10 ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பனியன் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தன. இதன் காரணமாக நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. பனியன் நிறுவனங்களும் உற்பத்தி இன்றியும், தொழிலாளர்கள் இன்றியும் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் செய்திகள்