அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்: ஒரே குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அதிகளவில் தொற்று பரவுகிறது

அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், ஒரே குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அதிகளவில் தொற்று பரவுகிறது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

Update: 2021-03-24 00:08 GMT
சென்னை, 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ‘நேரம் நெருங்குகிறது, நமது இலக்கை அடைய’ என்ற தலைப்பில் நேற்று உலக காசநோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், காசநோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டிய முக்கியத்துவம் மற்றும் சமூக பங்கேற்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ‘மறைமுக காசநோய்’ மற்றும் ‘சிகிச்சைக்கு கடினமான காசநோய்’ என்ற புத்தகங்களை வெளியிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

62 ஆயிரம் காசநோயாளிகள்

காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இன்று (நேற்று) காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஒரு கோடி மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டு, அதில் 10 லட்சம் பேர் இறக்கின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் 62 ஆயிரம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் மற்ற மாநிலங்களைப் போல கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். மேலும் கூட்டமான இடங்களில் மட்டுமல்லாமல், தள்ளுவண்டி கடைகளில் சாப்பிடும்போதும் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்க வேண்டும்.

கொத்தாக பாதிப்பு

சென்னை, கோவை போன்ற பகுதிகளில் இன்னும் பரிசோதனைகளை அதிகரித்து கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். தடுப்பூசி மையங்களை அதிகரிக்கவேண்டிய தேவை இருந்தால், அதற்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்கள், கமிஷனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக கவசம் அணியாததற்காக தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.80 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று (நேற்று முன்தினம்) மட்டும் 1.5 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

ஒரே குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அதிகளவில் தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆதம்பாக்கம், நங்கநல்லூர், கோடம்பாக்கம் ஆகிய 13 இடங்களில் கொத்தாக பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி, மாநில காச நோய் அலுவலர் டாக்டர் ஆஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்